Selamat Datang
[Welcome Home]



Friends, visit Germany in Focus to get hot news & info about Germany. This page is available in UNICODE

For more intresting topics, ckeck my weblog at Suba's Musings. This page is set in TUnicode encoding.

For more information on Tamil, my hobbies and other information visit my web portal at Suba's campus

Computer and Robotics education in Tamil Digital Village

Visit Tamil Heritage Foundation portal to learn more info about Tamil palm Leaf digitization efforts


<<- The Tamil text is in Unicode encoding. If there is a problem in viewing, please activate murasu Anjal to view the pages. Murasu anjal is available free for download at http://www.murasu.com ->>




   

<< August 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31




My Favourite blogs!
http://nkannan.rediffblogs.com/
http://valavu.blogspot.com/
http://kasiblogs.blogspot.com/
http://www.tamillinux.org/ venkat/myblog/
http://tamilblogs.blogspot.com/


Contact Me
Email: ksuba100@yahoo.com


If you want to be updated on this weblog Enter your email here:

Dec 20, 2003
Add-on

நான் ஜெர்மனிக்கு வந்த புதிதில் இந்திய தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்க அவர்கள்  தவறியதில்லை. "மலேசியத் தமிழர்கள் பேசும் போது இறுதில் 'லா' சேர்த்துக் கொள்வார்களாமே. அது ஏன்?" என்பது தான் அது.
இப்படிப்பட்ட இக்கட்டான மொழி சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் விளக்கமளிப்பது கடமையாகிவிடுகின்றது. ஆனாலும் என்னோடு பேசுபவர்கள் நான் இந்த சிறப்பு இணைப்பை பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பர். அதற்குக் காரணம் இருக்கின்றது.

மலாய் மொழியில் 'லா' என்ற சொல்லின் பயன்பாடு மிக முக்கியமானது. வாக்கியம் முடியும் போது இது பயன்படுத்தப்படுகின்றது. கூறுகின்ற ஒரு வாக்கியத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகவும் பேசுகின்றவர்களுக்கிடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு மலாய் மொழி சொல் ஒன்று:


'Cepatlah'  - cepat என்பது விரைவாக என்று பொருள்படும் . அதோடு lah சேரும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டு உணர்வுகளும் சேர்ந்து வெளிப்படுவதாக அமைந்து விடுகின்றது.

மலேசியத் தமிழர்களின் உரையாடல்களில் இந்த சேர்க்கை சுவாரசியமான ஒன்று. சாதாரணமாகப் பேசும் போது எப்படி இந்த சொல் தமிழில் சேர்ந்து கொள்கின்றது என்று பாருங்கள்.

 உதாரணம்:
1. என்னலா செய்றீங்க?
2. வாங்கலா.. போகலாம்!
3. சரிலா.. நானே முடிச்சிடறேன்.
 


 








இப்படி சர்வ சாதாரணமாக 'லா' வாக்கியங்களில் சேர்ந்து கொள்வதுதான் நடைமுறை உண்மை.

நான் தமிழ் மொழியை கல்லூரியில் தனி ஒரு பாடமாக எடுத்துப் பயின்றதால் மிகக் கவனமாக 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். (ஆனாலும் அவ்வப்போது பிற மொழி கலப்பு சேர்ந்து விடுவதை முழுதாகத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) இப்போதெல்லாம் மலேசியா திரும்பும் போது புதிதாக சந்திக்கும் தமிழ் நண்பர்களிடம் பேசும் போது  என் பேச்சுத் தமிழை வைத்து நான் தமிழகத்திலேயிருந்து வந்திருக்கின்றேனா அல்லது இலங்கைத் தமிழரா என்று என்னைக் கேட்ட சம்பவங்கள் பல உண்டு.
என்னைப்போல 'மிகக் கவனமாக' பேசுகின்ற தமிழர்கள் பலர் மலேசியாவில் இருக்கின்றனர். ஆக, கொஞ்சம் கவனம் வைத்து பேச ஆரம்பித்தால் 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் தனித் தன்மையோடு வருகின்ற 'லா' சேர்ந்த தமிழுக்கும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது!.

Posted at 02:31 pm by subaillam
Make a comment

Dec 19, 2003
Wayang Kulit

இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமான இராமயண காப்பியம் மலாய்க்காரர்களே அதிகமாக வாழும் மலேசியாவிலும் மிகப் பிரபலமான ஒரு பழங்கதையாக மதிக்கப்பட்டு வருகின்றது என்பது மற்ற இடங்களில் வாழ்கின்ற தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இராமன் சீதையைப் பற்றிய இந்த காப்பியம் இந்து அரசர்களால் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டே தீபகற்ப மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

   
இந்தக் கதையை, கற்றவர்கள்  மற்றுமின்றி சாதாரண மக்களும் தெரிந்து வைத்திருக்குமளவுக்கு செய்த பெருமை தோல் பாவை  என்று சொல்லப்படும் ஒரு வகை கலாச்சார விளையாட்டையே சாரும். இந்த விளையாட்டிற்கு Wayang Kulit என்பது மலாய் மொழிப் பெயர்.

பொம்மைகளைத் திரைக்குப் பின்னால் இருப்பவர் அசைத்துக் கொண்டிருக்க, கதையைப் பாடலாக மற்றொருவர் பாடிக் கொண்டிருப்பார். தோல் பொம்மையை அசைப்பவரை Dalang (டாலாங்) என்று  சிறப்பாக அழைப்பார்கள். இவர் இந்த விளையாட்டில் கைதேர்ந்த விற்பன்னராக இருக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கென்று சில நியதிகளும் உண்டு.  கதாநாயகன் மற்றும் ஏனைய நல்ல கதாமாந்தர்கள் வலது பக்கத்தில் காட்சியளிப்பார்கள். வில்னன்கலும் வில்லிகளும்:-) இடது  பக்கத்தில் காட்சியளிப்பார்கள். 

மலேசியாவில் குறிப்பாக கிளந்தான் மாநிலத்தில் தான் இந்த வகை விளையாட்டை அதிகமாகக் காணமுடியும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இப்போதெல்லாம் இம்மாதிரியான பழங்கால கலாச்சார விளையாட்டுக்களில் ஆர்வம் ருப்பதில்லை. அதனால் வளர்ச்சியின்றி இந்தக் கலை படிப்படியாக மறைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அதோடு தீவிரவாத இஸ்லாமிய சட்டத்தை நிறுவ முயன்று கொண்டிருக்கும் கிளந்தான் மாநில அரசாங்கம் (கிளந்தான் திரங்காணு ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இஸ்லாமிய தீவிரவாத கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது)  இஸ்லாமிய சமையத்துக்குப் புறம்பான பல  விஷயங்கள் இந்த வகை கதைகளின் வழி மக்களுக்குச் செல்வதால் இதனைத் தடுக்க வேண்டும்  என்று 1980ல் சட்டம்  இயற்றியது. அதனால் சுற்றுப்பயணிகளுக்காக மட்டுமே தற்சமயம் ஒரு சில இடங்களில் Wayang Kulit காட்டப்படுகின்றது.

Posted at 03:08 pm by subaillam
Comments (2)

Dec 9, 2003
National service


இன்றைய ஸ்டார் (http://www.thestar.com.my) தலையங்க செய்திகளில் ஒன்றாக வந்திருக்கும் மலேசிய தேசிய சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோ ரைப் பற்றிய தகவலைப் படித்தபோது ஒரு வாரம் நான் கெடா மாநிலக் காடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் பயிற்சி தான் ஞாபகத்திற்கு வந்தது.

அது ஒரு வகையில் சற்று எளிமையான ஒரு பயிற்சிதான். கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக இந்தப் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்பது அப்போதிருந்த நிபந்தனை. இந்தப் பயிற்சியைப் பற்றி முதலிலேயே கேள்விப்பட்டிருந்ததால் எனது பெயர் இந்த பயிற்சிக்காகத்க்
தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் காலை வாறி விட்டு விட்டார். என் பெயரும் சேர்க்கப்பட்டு நானும் ஒரு வார காலம் இந்த தீவிர பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு வந்திருந்தது.


பயிற்சியின் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை எங்களுக்குத் தெரிவித்து விட்டனர். பெண்கள் எந்த வகையான அலங்காரப் பொருட்களையும் உபயோகப்படுத்த்தக் கூடாது, கண்ணாடியில் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் இதில் அடங்கிய கட்டளைகள். யாராவது அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வைத்திருந்த்கால் அவற்றை வீசிவிடவேண்டும் என்று எங்கள் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த ஒரு மலாய் பெண் யாருக்கும் தெரியாமல் ஒரு Fair & Lovely face cream வைத்திருந்தாள். இதை எப்படியோ கண்டு பிடித்து விட்ட அந்த அதிகாரி, குழுவில் இருந்த எங்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கினார். தண்டனை என்ன தெரியுமா? கழுத்தளவு நீர் தேங்கிய ஒரு குளத்தில் நாங்கள் 30 நிமிடம் நிற்க வேண்டும் என்பது தான். இந்த குளம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒன்று; சேர் நிரம்பிய குளம். இதில் 30 நிமிடங்கள் நிற்பதை
இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சகிக்க முடியவில்லை.


இப்படி சுவாரசியமான பல தண்டனைகளை இந்த பயிற்சியின் போது அனுபவித்திருக்கின்றேன். மலையிலிருந்து குதிப்பது, மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குக் கயிரைக் கட்டி அதிலேயே நடப்பது; நடுக் கடலில் தனியாக படகு ஓட்டிச் செல்வது; இப்படிப் பல பயங்கர அனுபவங்கள். இந்த பயிற்சியையெல்லாம் முடித்து விட்டு 7 நாட்களுக்குப் பிறகு திரும்பும் போது எனது பொருட்களை எல்லாம் காரில் வைத்து விட்டு எனது முகத்தைக் கார் கண்ணாடியில் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி
விட்டது. என்னையே எனக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு நான் உருமாறியிருந்தேன்.

பல வகையில் எனக்கு வெறுப்பினை இந்தப் பயிற்சி உண்டாக்கியிருந்தாலும், அதற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட மனோ தைரியத்தை நான் நிச்சயமாக உணர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மலேசிய மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி நிச்சயமாக பல வகையில் உதவும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.

Posted at 07:30 pm by subaillam
Comments (3)

Dec 7, 2003
Flood havoc in Penang

கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் மழை தூரல் அவ்வப்போது விடாமல் இருந்து கொண்டிருக்கின்றது.  இங்கிருப்பது போலவே மலேசியாவிலும் நவம்பர் டிசம்பர் மாதங்கள் மழை மாதங்கள்தான். இந்த மாதங்களில் சில வேளைகளில் ஒவ்வொரு நாளும் விடாமல் மழை பெய்யும். பினாங்கில் இந்த மாதங்களில் வெள்ளம் வந்து மக்கள் சிரமப்படுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக Jalan P.Ramlee எனச் சொல்லப்படும் சாலையிலும் அதன் அருகாமையில் உள்ள இடங்களிலும் வெள்ளம் பெருகி விடுவது வாடிக்கை.

  எனது பள்ளித் தோழி சீதாவின் வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கின்றது. டிசம்பர் மாதம் வந்து விட்டால் அவள் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் முன் ஜாக்கிரதையாக மேற்பகுதிழில் பாதுகாப்பாக எடுத்து வைத்து விடுவார்கள். இல்லையேல் ஒரு அடி உயரத்திற்குத் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் இந்தப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விடும்.
வெள்ளத்தைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் செய்திகளின் வழியும் என் தோழியின் வழியும் கேள்விப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பினை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. என் வீடு இருக்கும் பகுதி உயர்ந்த நிலப்பகுதி என்பதால் நீர் தேங்கி வெள்ளம் வந்து அதில் விளையாடும் வாய்ப்பு இன்றளவும் கிட்டவில்லை. மழை விடாமல் பெய்யும் போது அதில் விளையாடுவது தான் நாம் எல்லோருக்குமே பிடிக்குமே. எனக்கும் அப்படித்தான். அப்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் வெள்ளம் வந்து அதனால் சிலர் வசதிகளை இழந்து சிரமப்படுவதைக் கேள்விப்படும் போது சங்கடமாகப் போய்விடுவதுண்டு.



 


 


 


 


 



 

 P.Ramlee சாலைப் பகுதியில் வெள்ளம் சில வேளைகளில் ஒரு வாரத்திற்கும் கூட வற்றாமல் இருக்கும். நீர் மட்டம் உயர்ந்து விடுவதால், மக்கள் படகுகளைப் பயன்படுத்தித் தான் வெளி இடங்களுக்குச் செல்ல முடியும். இதை சீதா சொல்லும் போது எனக்கும் அப்படி படகில் ஏறி சுற்றி வரவேண்டும் என்று தோன்றும்...:-)
 

சென்ற முறை மலேசியா சென்றிருந்தபோது எனது தோழியிடம் வெள்ளத்தை பற்றி விசாரித்தேன். இப்போதெல்லாம் மழை விடாமல் பெய்தாலும் வெள்ளம் வருதில்லை என்று சொன்னாள். சாலைகளைப் புணரமைப்புச் செய்து நீர் செல்லும் வழிகளை மாற்றி அமைத்து விட்டமையால் இப்போதெல்லாம் வெள்ளம் வருவதில்லை என சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நல்ல செய்திதான். ஆனால் P.Ramlee சாலை வாழ் மக்களுக்குக் கிடைக்கும் இலவச படகுச் சவாரி இல்லாமல் போய்விட்டது தான் ஒரு குறை, இல்லையா..?? ..:-)

Posted at 08:48 pm by subaillam
Make a comment

Dec 2, 2003
Durian - King of the fruit

நேற்று மதிய உணவிற்கு நண்பர்களோடு சென்றிருந்தபோது மலேசியாவைச் சுற்றிப் பார்க்க எது உகந்த மாதம் என்ற கேள்வி நண்பர்களிடமிருந்து எழுந்தது. ஒவ்வொரு மாதங்களைப் பற்றியும் அதன் தன்மைகள் சீதோஷ்ண நிலை போன்ற வற்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வரும் போது ஜூலை மாதம் தொடங்கி அக்டோ பர் வரை மலேசியாவிற்குச் சென்றால் உள்நாட்டுப் பழங்களையும் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி வைத்தேன். அப்படி என்ன வித்தியாசமான பழங்கள் உங்கள் நாட்டில் என்று கேட்க ஆரம்பித்தனர் என் ஜெர்மானிய நண்பர்கள். பாவம். இவர்கள் விடுமுறைக்கு பிரான்ஸ் எல்லையைக் கடப்பதே கூட அதிசயம் தான். அப்படி இருக்கும் போது ஆசிய நாடுகளின் சிறப்புக்களை அதுவும் மலேசியாவின் தனிச் சிறப்பைச் சொல்ல வேண்டியது எனது கடமையல்லவா..:-)

விடுமுறை எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடனேயே எனக்கும் கூட பல வேளைகளில் ஆகஸ்டு மாதம் மலேசியா போகலாமே என்று நினைக்க வைக்கும் அளவிற்கு இந்தப் பழங்களுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. டுரியான் பழத்தின் சுவைக்கு ஈடு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். (யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்..:-) ) அதனை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத் தானே அதன் அருமை தெரியும்.


புதிதாக இந்தப்பழத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பழம் முதலில் ஒரு வித பயத்தை கட்டாயமாக ஏற்படுத்தி விடும். அதன் தோற்றம் அப்படி. அதற்கும் மேலாக அதன் வாசம். முள் நிறைந்த இந்த பழத்தை கையில் தூக்கிப் பிடிப்பதும் கூட சிரமமான ஒரு வேலைதான். ஆனால் பழத்தை கஷ்டப்பட்டு வெட்டு சாப்பிடும் போது இந்த அத்தனை துன்பங்களும் பஞ்சாகிப் போய்விடுவதுதான் உண்மை. இந்தப் பழத்தை வெட்டி உள்ளே இருக்கும் பழத்தை எடுப்பது கூட ஒரு தனிக்கலை; எல்லோராலும் அதனைத் திறமையாகச் செய்ய முடியாது. இன்றளவும் நான் அதில் முழுமையாக திறமை அடையவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.


டுரியான் பழங்களைத் தனியாக சாப்பிடுவது போல சமைத்தும் கூட உண்ணலாம். இதற்கான பல சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாலும் எனக்கு எப்போதும் இந்த பழத்தை சமைக்காமல் உண்பதற்குத்தான் பிடிக்கும். ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே போதும். மதிய உணவே தேவையில்லை. அவ்வளவு பெரிதாக இந்தப் பழங்கள் இருக்கும். இந்த டுரியான் பழங்களைப் பற்றிய பல தகவல்கள் அடங்கிய வலைப்பக்கங்க்ளை உங்களுக்காக இங்கு பட்டியலாக்கியிருக்கின்றேன்.
http://www.ecst.csuchico.edu/~durian/book.htm (Book Gallery)
http://www.ecst.csuchico.edu/~durian/rec/recipe.htm (Recipe)
http://www.durian.net/ (Info center)
http://agrolink.moa.my/comoditi/durian/durian.html(General info)

அடுத்த முறை மலேசியா சென்றால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சென்றால் கட்டாயமாக டுரியான் பழத்தை சாப்பிட்டுப் பாருங்களேன். இறைவனின் படைப்பில் இந்தப் பழமும் ஒரு உன்னதமான வித்தியாசமான ஒரு creative item தான்!..:-)

Posted at 10:42 pm by subaillam
Comments (11)

Nov 27, 2003
Cinema

பினாங்கில் உள்ள சுற்றுலா தளங்களைப் பற்றி எனது முந்தைய குறிப்புக்களில் கொஞ்சம் சொல்லியிருந்தேன். கலாச்சார மையங்களாக இருந்தாலும் சரி, ஓய்வாக பொழுதைக் கழிப்பதாக இருந்தாலும் சரி, பினாங்கு மிகச் சிறந்த ஒரு ஊர் என்றே சொல்ல வேண்டும். பினாங்கில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருப்பது போல அடிக்கடி தமிழ் படங்களை திரையிடும் 2 திரையரங்குகள் இருந்தன. ஒன்றின் பெயர் Rex; மற்றொன்று Paramound. இந்த இரண்டு திரையரங்குகளிலும் குடும்பத்தோடு சென்று சில படங்களைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கின்றது. (ஆட்டுக்கார அலமேலு என்ற சிவகுமார்-ஸ்ரீபிரியா நடித்த ஒரு படம் தான் அப்போது கடைசியாக நான் பார்த்த படம்)

அதற்குப் பிறகு இடையில் சில ஆண்டுகள் தமிழ் படங்களே திரையிடப்படாமல் இருந்தன. ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்கள் வர ஆரம்பித்தவுடன் பினாங்கிலும் சில திரையரங்குகள் தமிழ் படங்களைத் திரையிடுவதில் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன. ரஜினியின் படத்தைப்பார்ப்பதற்காகத் திரையரங்கில் கூடிய மக்கள் கூட்டத்தையும் அதிலுள்ள ஆர்வத்தையும் பார்த்த சீன திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓடியன் திரயரங்கு இதில்முன்னோடி. படிப்படியாக இப்போது பினாங்கு முழுவதும் இருக்கின்ற மொத்த திரயரங்குகளில் ஏறக்குறைய நான்கில் தமிழ் படங்கள் காட்டப்படுகின்றன.

பொதுவாகவே மலேசியாவில் இருக்கும் மலாய் இனத்தவர்களுக்கு ஹிந்திப் படங்கள் என்றால் கொள்ளைப் பைத்தியம். இளம் வயதுப் மலாய் பெண்களில் பலர் ஷாருக்கான் மற்றும் கமலஹாசன் பைத்தியங்களாகவே இருக்கின்றனர் இப்போது. மலாய் ஆண்களோ ஐஸ்வர்யாராயின் மேல் தீரா காதல் கொண்டிருக்கின்றனர். ஆக இந்தியக் கலாச்சாரம் என்பது அன்னியமான ஒன்றல்ல மலாய்க்காரர்களுக்கு. அதனால் மலாய் இனத்தவர்களும் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக தமிழ் படங்கள் ஆகிவிட்டன.

Posted at 07:51 pm by subaillam
Comments (1)

Nov 24, 2003
My Music teacher - II

சங்கீத வகுப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆசிரியர் எங்களை ஹார்மோனியப் பெட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்தியாவிலிருந்து பினாங்கிற்கு இந்திய ஆடைகள் மற்றும் பல வழிபாட்டு பொருட்களையும் வரவழைக்கும் வியாபாரி ஒருவர் எங்கள் அம்மாவிற்கு தஞ்சாவூரிலிருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தார். (எங்கள் அம்மா தஞ்சாவூரிலிருந்து வந்தவர். அவரது தம்பிகள் இருவர் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். ) இவர் வந்திருந்த சமயத்தில் எங்களுக்கு இசைவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் எங்களுக்கு அடுத்த முறை வரும் போது ஒரு ஹார்மோனியப் பெட்டியைப் கொண்டுவரும்படி அவரிடம் கூறிவைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்த அந்த வியாபாரி எங்களுக்கு ஒரு ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டுவர மறக்கவில்லை. அதைப் பார்த்த எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு புதிய ஹார்மோனியப் பெட்டி அல்ல. யாரோ பயன்படுத்திய பழைய ஹார்மோனியப் பெட்டிதான் என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டோ ம். அதை தெரிந்து கொண்ட அந்த ஆசாமி, அந்த ஹார்மோனியப் பெட்டியின் வரலாற்றைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.


இந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா வைத்திருந்தாராம். ஆரம்ப காலத்தில் படங்களுக்காக முயற்சி செய்துகொண்டிருந்த போது மற்றும் கலை நிகழ்ச்சிகள் செய்யும் போதெல்லாம் இந்த ஹார்மோனியப் பெட்டியைத்தான் பயன்படுத்துவாராம். பிறகு கொஞ்ச நாள் இதனை மலேசிய வாசுதேவனிடம் கொடுத்திருந்தாராம். அவர் வேறு மற்றொரு ஹார்மோனியப் பெட்டியை வாங்கியவுடன் இந்த ஆசாமியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அந்த ஹார்மோனியப் பெட்டியை எங்களுக்குக் கொடுப்பதாக முகம் முழுக்க புன்னகை வழிய எங்களுக்கு கதை (விட்டார்) சொன்னார். அப்போது ஆச்சரியம் தாங்கமுடியாமல் இந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கின்றது.

Posted at 09:39 pm by subaillam
Comments (2)

Nov 20, 2003
My Music Teacher

என் அம்மா தமிழகத்திலிருந்து வந்தவர். நல்ல இசையையயும் ஓரளவுக்குக் கற்றவர்; அதனால் எனக்கும் ஒரு வயதே மூத்தவளான என் அக்காவிற்கும் சங்கீத ஞானம் கொஞ்சமாவது வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில தமிழ் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுப்பார். அதோடு தமிழில் அமைந்த தேவாரப் பாடல்களையும் ஆலயங்கலுக்குச் செல்லும் போதெல்லாம் பாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமானது. கர்நாடக இசையை முறையாகப் படிக்க வேண்டும் என்பது அவருக்கு ஆசை. ஆக எங்களுக்காக ஆசிரியரைத் தேட ஆரம்பித்தார். தமிழகத்தில் இருப்பது போல மிகச் சுலபமாக இசை ஆசிரியரை மலேசியாவில் கண்டு பிடிக்க முடியாது. முறையான இசை ஆசிரியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கிடைப்பார்கள்.

என் அம்மாவின் தேடுதல் வீண் போகவில்லை. பேராக் மாநிலத்தில் பல இடங்களில் இசை வகுப்புக்களை நடத்தி வந்த திரு சிவ சுப்ரமணியத்தைப் பற்றி நண்பர்கள் வழியாக கேள்விப்பட்டு அவரை பினாங்கு மாநிலத்திற்கும் வரவழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். திரு சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் மிகப் பிரபலமான நாகசாமி பாகவதரின் இளைய சகோதரர். இவர் மலேசியாவிலேயே பல ஆண்டுகளாக தங்கி விட்டவர். இங்கேயே திருமணமாகி குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வந்து விட்டனர்.


என் அம்மா தீவிர முயற்சி செய்து அவரை பினாங்கு மாநிலத்திலும் இசை வகுப்புகளை ஆரம்பிக்க வைத்து விட்டார். ஒவ்வொரு வாரமும் எங்கள் இல்லத்திலேயே செவ்வாய் கிழமைகளில் இசை வகுப்பு நடைபெறும். எங்கள் இருவரோடு மேலும் பலர் இந்த வகுப்புக்களில் கலந்து பயிற்சி எடுத்து வந்தனர். அதில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் அடங்குவார். முதலில் அவ்வளவாக ஈட்டுபாடு வரவில்லையென்றாலும் போகப் போக கர்நாடக இசை எனது வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை வகிக்கும் அளவுக்கு எனக்கு நெருங்கியது. ஆசிரியர் சிவசுப்ரமணியம் அவர்களோடு எப்போதும் அவரது மனைவியும் கூடவே வருவார்கள். இவர் பாடம் நடத்தும் நேரத்தில் கையில் துணியை வைத்து தைத்துக் கொண்டோ பின்னல் செய்து கொண்டோ இருப்பார். இவரோடு சேர்ந்து பாடுவது இல்லை (சிந்து பைரவியில் வரும் பைரவி போல்..:-) ).

மலேசியாவில் இருந்த வரையில் இவரிடம் பல ஆண்டுகளாக இசை பயின்றிருக்கின்றேன். ஆசிரியருக்குப் பிடைத்த மாணவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும். அவரோடு சேர்ந்து 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற கீர்த்தனையை ஒரு முறை மேடையில் கச்சேரியில் பாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. இவர் மூலமாக எங்களுக்குக் கிடைத்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய ஒரு கதை உண்டு. அதனை வேறொரு முறை சொல்கிறேன்.

Posted at 10:31 pm by subaillam
Comments (2)

Nov 15, 2003
9 day celebration


இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்த சமையத் திருவிழா நவராத்திரி. இதனை சீனர்களும் வேறு வகையில் கொண்டாடுகின்றார்கள் என்பது தெரியுமா.?

மலேசியாவில் குறிப்பாக நவராத்திரி வருகின்ற செப்டம்பர் அக்டோ பர் மாதங்களில் சீனர்களும் தொடர்ச்சியாக 9 நாட்கள் தங்களின் தெய்வத்திற்காக சிறப்பான வழிபாடுகளில் ஈடுபடுவர். சில வேளைகளில் இந்தத் திருநாள் நமது நவராத்திரி நாளோடு சேர்ந்தே வரும். முக்கிய வழிபாட்டு தெய்வமாக ஒரு பெண் தெய்வமே வடிக்கப்பட்டிருக்கும். சீனர்களின் ஆலயங்களில் பெரிய 2 மீட்டர் நீளம் கொண்ட ஊதுபத்திகள் நாள் முழுக்க எரிந்து கொண்டே இருக்கும். அந்த 9 நாட்களும் சீனர்கள் சுத்த சைவ உணவு பழக்கத்தையே கடைபிடிப்பார்கள்.

தெருக்களில் சீனர்களின் விதம் விதமான சைவ உணவு வகைகள் விற்கப்படும். இந்த சமயத்தில் பினாங்கில் சாலை மூலைகளிலெல்லாம் தற்காலிக உணவுக் கடைகள் புதிதாக முளைத்திருக்கும். நமக்கும் இந்த நாள் திருநாள் தான். நமது நவராத்திரி வழிபாட்டிற்கும் இந்த பூஜைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கின்றது. ஆனால் அதன் தொடர்பு இப்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

பொதுவாகவே மலேசியாவில் உள்ள சீனர்கள் அதிலும் குறிப்பாக புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்துக்களின் கோவிலுக்கு வருவது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் பார்த்தால் ஒரு சீனராவது பக்தர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருப்பார். தைப்பூசத்திருவிழாவில் சொல்லவே வேண்டியதில்லை. பால்காவடி, நீண்ட அலகுக் காவடி போன்றவற்றை இந்துக்களைப் போலவே விரதமிருந்து எடுப்பார்கள்.

Posted at 08:41 pm by subaillam
Make a comment

Nov 12, 2003
My friend - Seok Hwa


பல நாட்களுக்குப் பிறகு எனது மலேசியத் தோழி சியோக் ஹூவா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். எனது மலேசிய நண்பர்களில் பலர் சீனர்கள் தான். மலேசியாவில் சீன மலாய் இனத்தவருடன் பழக வேண்டிய சூழல் ஆரம்பப் பள்ளியிலேயே தொடங்கி விடுவதால் எந்த பாகுபாடும் இல்லாமல் நல்ல நட்போடு பழகும் வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சியோக் ஹூவா ஒரு சீனப் பெண். என்னோடு பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்றாகப் படித்தவள். சீனர்களில் ஹொக்கியான் எனச் சொல்லப்படும் மொழியைப் பேசுபவள். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு விடாமல் தொடர்ந்து வருவது ஒரு வகையில் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையிலேயே சாந்த குணம் படைத்தவள் சியோக் ஹூவா. எங்கள் நண்பர்கள் கூட்டத்திலேயே மிக மிக அமைதியானவள். சத்தமாகக் கூட பேச மாட்டாள். பெரிய குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள்.

முன்பெல்லாம் வாரம் ஒரு முறையாவது எங்கள் நண்பர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்வோம். பொதுவாக எங்கள்பேச்சு பொருளாதாரம் மற்றும் கணினித் துறை சார்ந்ததாகவே இருக்கும். சீனர்கள் கடமையில் கண்ணானவர்கள் என்பது ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை மெய்ப்பிக்கும் வகையில் எங்களது பேச்சும் அமைந்து விடும். இந்த நண்பர்கள் குழுவில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். இவளுக்கு உலகியல் விஷயங்களுக்கும் மேலாக சமுதாய சிந்தனை, இறை வழிபாடு என்பதெல்லாம் கொஞ்சம் முக்கியம்.

சியோக் ஹூவா புத்த மதத்தைச் சேர்ந்தவள். ஒரு முறை விசாக தினத்தன்று என்னையும் அவள் குடும்பத்தாரோடு பினாங்கில் மிக முக்கிய புத்த விகாரமான Sleeping Buddha ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். புத்த மதத்தினருக்கு இது மிக முக்கிய சமயத் திருவிழா என்பதால் சாலைகளை எல்லாம் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் கூட்டம் அமைந்திருக்கும். பூஜைக்கு வருபவர்களுக்கெல்லாம் புத்தபிக்கு சுவாமி மந்திரம் ஜெபித்த அருள் நூலை கையில் கட்டிவிடுவார். அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டாலும் இறுதியில் புத்தபிக்குவிடமிருந்து நூலை, வாங்கி கையில் எனக்கு கட்டி விட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியே தோன்றியது. நண்பர்களின் அன்பான வார்த்தைகள் மனதிற்கு இன்பமளிக்கக் கூடியவை அல்லவா? விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போது நிச்சயம் அவளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதே உறுதி செய்து கொண்டு விட்டேன்.


Posted at 11:43 pm by subaillam
Comments (5)

Previous Page

Next Page