Selamat Datang
[Welcome Home]



Friends, visit Germany in Focus to get hot news & info about Germany. This page is available in UNICODE

For more intresting topics, ckeck my weblog at Suba's Musings. This page is set in TUnicode encoding.

For more information on Tamil, my hobbies and other information visit my web portal at Suba's campus

Computer and Robotics education in Tamil Digital Village

Visit Tamil Heritage Foundation portal to learn more info about Tamil palm Leaf digitization efforts


<<- The Tamil text is in Unicode encoding. If there is a problem in viewing, please activate murasu Anjal to view the pages. Murasu anjal is available free for download at http://www.murasu.com ->>




   

<< July 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04
05 06 07 08 09 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31




My Favourite blogs!
http://nkannan.rediffblogs.com/
http://valavu.blogspot.com/
http://kasiblogs.blogspot.com/
http://www.tamillinux.org/ venkat/myblog/
http://tamilblogs.blogspot.com/


Contact Me
Email: ksuba100@yahoo.com


If you want to be updated on this weblog Enter your email here:

Nov 11, 2003
Penang - (3) Little India

பினாங்கின் பல மூலைகளில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈட்டுபட்டிருந்தாலும் Little India என்று சொல்லப்படும் பகுதியில்தான் ஏராளமான இந்தியர்களுக்கானப் பொருட்கள் விற்கப்படும் கடைகளைக் காண முடியும். தீபாவளி, தைப்பூசம் மற்றும் பிற விழாக்காலங்களில் இந்தப் பகுதியில் நடப்பதற்கே இடம் இல்லாத வகையில் கூட்டத்தைக் காண முடியும். மலேசியாவிலேயே மிகப் பிரபலமான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படும் அளவுக்கு இங்கு கிடைக்கும் பொருட்கள் தரத்திலும் விதத்திலும் சிறந்து விளங்குவதைக் காண முடியும்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேலைகளையும் துணி வகைகளையும் விற்பனை செய்யும் சேலைக் கடைகள் இங்கு மிகப் பிரபலம். ஹனீபா, அனிதா, V.K.N., உமையாள், குமரன்'ஸ் என பல கடைகள் இங்கே. சென்னையின் பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் கிடைக்கக் கூடிய எல்லா துணிகளும் இங்கேயும் கிடைக்கின்றன.

மற்றும் புதிய தமிழ், ஹிந்தி பாடல் ஒலிப்பேழைகள், படங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என பல தினுசுகளில் இங்கே பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சாலைகளில் நடக்கும் போதே தமிழ் பாடல்கள் பல திசைகளிலும் ஒலிப்பதைக் கேட்க முடியும். இது முற்றிலும் தமிழர்களின் தெருவாகவே மாறிவிட்டிருக்கின்றது.
இந்திய உணவுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இப்பகுதியிலுள்ள எல்லா தெருக்களிலும் இந்திய பலகாரங்கள் விற்கப்படும் கடைகள் உள்ளன. சுடச் சுட தோசை, பரோட்டா, சாதம் எல்லாம் கிடைக்கக் கூடிய இடம் இது.

தமிழர்கள் நகைப் பிரியர்கள் என்பதால் இங்கு தங்க வைர நகைகள் விற்கப்படும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. மக்கள் கூட்டம் விழாக்காலங்களில் ஈக்கள் மொய்ப்பது போல இங்கு கூடியிருப்பது தவிர்க்க முடியாத ஒரு காட்சி.

இந்தப்பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பகுதியின் ஆரம்பத்திலேயே மகாமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இருக்கின்றது. மிகப்பழமையான இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகாக பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் ராகு கால துர்க்கை அம்மன் பூஜை மிகச் சிறப்பானது. தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் பினாங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள பகுதி இது. தொடரும்...

Posted at 12:28 am by subaillam
Comments (1)

Nov 6, 2003
Malay Dress

மலேசியர்கள் பல வித வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்ள விரும்புவர். மலாய்க்காரர்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி விதம் விதமான வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்வர். பெண்களைப் பொறுத்தவரையில் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சிறப்பான ஆடைகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கு ஒரே விதம் தான்.
ஆண்கள் அணியும் ஆடையை Baju Melayu (உச்சரிக்கும் போது பாஜு மெலாயூ என்று சொல்ல வேண்டும்) என்பர். பெண்களின் உடைகளுக்குப் பல பெயர்கள் உண்டு, அதன் விதத்தைப் பொறுத்து. பொதுவாகவே சிறப்பு நாட்களில் விலையுயர்ந்த பட்டுத் துணியால் செய்யப்பட்ட ஆடைகளையே மலாய்க்காரர்கள் அணிவார்கள். விழாக்காலங்களிலும், சிறப்பு விருந்துகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் பட்டாடைகளில் வருவதை கடைபிடிப்பார்கள்.

இந்த வகை உடை பாஜு கெடா என அழைக்கப்படும். மிக எளிமையான முறையில் தைக்கப்பட்ட ஆடை இது. கெடா என்பது ஒரு மாநிலத்தின் பெயர். இந்த மாநிலத்தில் நெல் வயல் அதிகம். வயலில் வேலை செய்யும் பெண்கள் அணிவதற்கு ஏதுவாக அமைந்த ஆடை இது. ஆனால் நாளடைவில் எல்லா பெண்களும் (நானும் தான்) அணியும் நவநாகரிக ஆடையாக இது மாறிவிட்டிருக்கின்றது.

இந்த வகை ஆடை தான் பெரும்பாலான மலேசியப் பெண்கள் விரும்பி அணியும் ஆடை. இதை பாஜு கெபாயா என்று சொல்வோம். Batik வகை துணியால் அமைக்கப்படும் இவ்வகை ஆடைகள் மலேசியாவில் மிகப் பிரபலம். Malaysian Airlines பணியாளர்கள் அணிந்திருக்கும் ஆடையும் இந்த வகைதான்.
பாஜு கூரோங் என்று அழைக்கப்படும் இந்த வகை ஆடைதான் பல மலாய் பெண்களால் அணியப்படும் ஆடை. மலேசியாவின் எல்லா மூலைகளிலும் இந்த வகை ஆடைகள் கிடைக்கும். மிகச் சாதாரணமாக மலேசிய ரிங்கிட் 40 லிருந்து இந்த வகை ஆடைகளை வாங்க முடியும். அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்கள் பரவலாக அணியும் ஆடை இதுதான்.

உங்களுக்கும் இந்த ஆடைகளை அணிந்து கொள்ள ஆசையாக இருக்கின்றதா? இன்றே கிளம்புங்கள், மலேசியாவுக்கு!

Posted at 07:18 pm by subaillam
Comments (2)

Nov 5, 2003
Rubber plantation

மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சென்ற இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். மலேசியத் தமிழர்களில் 19ம் நூற்றாண்டில் பெருமளவில் குடியேறிய தமிழர்கள்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. உலகின் மிகப் பெரிய ரப்பர் உற்பத்தி நாடாக மலேசியா தற்பொழுது விளங்குகின்றது. இந்த வெற்றிக்கும் சிறப்பிற்கும் உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் தான்.

தொழிற்புரட்சிக்காலம் அது. 1876-ல் சர் ஹென்றி விக்ஹம் India office-ன் கட்டளைப்படி பிரேஸில் நாட்டிலிருந்து 70,000 ரப்பர் விதைகளைச் சேகரித்தி இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தார்.பின்னர் இந்த ரப்பர் விதைகளை லண்டனிலுள்ள Kew Garden-ல் பயிரிட்டு அவை வளர்க்கப்பட்டன. இதில் உயிர் பிழைத்த ரப்பர் மரக்கன்றுகள் 1877-ல் இலங்கைக்கும் பின்னர் மலேசியாவிற்கும் எடுத்துச் செல்லப்படு பயிரிடப்பட்டது.


மலேசியாவின் சீதோஷ்னத்திற்கு ரப்பர்கன்றுகள் நன்றாக வளர்வதைக் கண்ட பிரித்தானியர்கள், பல காடுகளை அழித்து ரப்பர் பயிரிட ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே மேற்கு மலேசியாவில் ஏறக்குறைய 2500 ஹெக்டர் நிலப்பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்தது. ரப்பரின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே காடுகளை அழித்து அங்கு தோட்டங்களை உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து அதிலும் குறிப்பாக தமிழர்களை இறக்குமதி செய்தனர்.

/td> ரப்பர் காடுகளில் வாழும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்பல சிரமங்களை உள்ளடக்கியதே. குறைந்த ஊதியம்; பற்பல சமூகப் பிரச்சனைகள்; தரமற்ற கல்வி போன்ற பற்பல சிரங்களுக்கு தோட்டப்புற தமிழர்கள் ஆளாகியிருக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் படிப்படியாக இப்போது பரவலாக நல்ல வளர்ச்சியைக் காணமுடிந்தாலும் முற்றாக இவர்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன என்று சொல்வதற்கில்லை.


மலேசியத் தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிளாலர்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மலேசிய இலக்கியங்களை அதிலும் குறிப்பாக சிறுகதைகளைதான் அலசவேண்டும். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றுனை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் நீங்கள் காணலாம். முகவரி http://www.tamil-heritage.org/photoarc/malaysia/msiawri.html

Posted at 07:54 pm by subaillam
Make a comment

Nov 4, 2003
Papa's garden

மலேசியா இயற்கை வளம் நிறைந்த ஒரு நாடு என்று எனது முந்தைய குறிப்பில் சொல்லியிருக்கின்றேன் அல்லவா? மலேசியாவின் சீதோஷ்ன நிலை சாதகமாக இருப்பதால் இங்கு பல விதமான காய்கறித்தோட்டங்கள், பழத் தோட்டங்கள் ஆகியவை அதிகம். பொதுவாக இல்லங்களிலும் தோட்டங்கள் வைத்திருப்பதைக் காண முடியும்.

என் அப்பாவுக்கு தாவரங்களை வளர்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் தனது நேரத்தையெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் தான் செலவிடுவார். அவரது கைவண்ணத்தில் பல பழமரங்களும் செடிகளும் வீட்டைச் சுற்றி காய்த்துக் குலுங்கும் அழகைக் காணலாம். அவரிடமிருந்து தான் எனக்கும் தாவரங்கள் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப் போலவே எனக்கும் இந்த ஆர்வம் இருந்ததால் பிற்காலத்தில் நானும் எனது நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். [இப்போது அதற்கு வாய்ப்பில்லை. இங்கு ஜெர்மனியில் apartment-ல் இருந்து கொண்டு எங்கே தோட்டத்தைப் பற்றி நினைப்பது..:) ]

எங்கெங்கிருந்தோ பூச்செடிகளையும் பழமரங்களையும் தேடிப் பிடித்துக் கொண்டுவருவார். நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் வீட்டில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு செடி வகையைப் பார்த்து விட்டால் அதை வாங்கிக் கொண்டுவராமல் விடமாட்டார். அவ்வளவு தீவிரமான ஆசை அவருக்குச் செடிகளின் மேல்.

எங்கள் தோட்டத்தில் எங்களது தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த தாய்லாந்து வகை பப்பாளி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த பப்பாளிப் பழத்தில் உள்ளே விதை இருக்காது. நல்ல சுவையான பழ வகை அது. அந்த மரம் பெரிதாகி காய்க்க ஆரம்பித்தவுடன் தான் ஆரம்பித்தது தொல்லையே. ஏற்கனவே எங்கள் தோட்டத்தில் ஒன்றுக்கு மூன்று பப்பாளி மரங்கள். அதில் இதுவும் சேர்ந்து கொண்டது. இப்போது நான்கு மரங்களும் காய்க்க ஆரம்பித்தால் அதை என்ன செய்வது? காய்க்கின்ற பழத்தை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார் என் அப்பா. பழத்தை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து நீளமான துண்டுகளாக வெட்டி எங்களுக்கு தட்டுக்களில் வைத்து பரிமாறி அதை நாங்கள் கோபத்தோடு சாப்பிட முடியாமல் சாப்பிடுவதை பார்க்க அவருக்கு அப்படி ஒரு ஆசை.

என் அப்பாவின் தொல்லை நாலுக்கு நாள் அதிகமாகும் வகையில் ஒவ்வொரு நாளும் பழங்கள் அதிகமாகக் காய்த்துக் கொண்டே தான் இருந்தன. சலிக்கச் சலிக்க பப்பாளிப் பழங்களை அப்போது சாப்பிட்டிருக்கின்றேன்.

இங்கு ஜெமனி வந்த பிறகு பப்பாளிப் பழத்தை வாங்குவதென்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இது exotic fruits வகையைச் சார்ந்தது என்பதால் ஏகப்பட்ட கிராக்கி இந்தப்பழத்துக்கு. நண்பர் ஒருவர் வீட்டில் சென்ற சனிக்கிழமை இரவு உணவிற்குச் சென்றிருந்தேன். குட்டியான ஒரு பப்பாளிப்பழத்தைக் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி வைத்திருந்தார்கள். என்ன செய்வது விலையான பழமாயிற்றே. பப்பாளிப் பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு எங்களை ஓட ஓட விரட்டும் அப்பாவின் ஞாபகம் அப்போது வராமல் இருக்குமா? ஏக்கம் தரும் நினைவுகள் அவை!

Posted at 10:51 pm by subaillam
Make a comment

Nov 3, 2003
Penang - 2


பினாங்கில் உள்ள Botanical Garden பற்றி சில குறிப்பூக்களை முந்தைய குறிப்பில் கொடுத்திருந்தேன் அல்லவா. இன்று மேலும் சில அழகிய இடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

பினாங்கில் Air Itam (உச்சரிக்கும் போது ஆயர் ஈத்தாம் என்று சொல்ல வேண்டும்) என்ற ஒரு பகுதி இருக்கின்றது. வணிகர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்று கூட இதனைச் சொல்லலாம். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் சீனர்கள். வாகனங்களில் இங்கு மதிய வேளைகளில் செல்வது என்பது ஒரு கஷ்டமான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஜன நெரிசல்; மற்றும் வாகன நெரிசல் உள்ள ஒரு பகுதி இது.

இதன் ஒரு பகுதியில் தான் Penang Hill என்று சொல்லப்படும் கொடிமலை இருக்கின்றது. இந்த மலை மிக மிக ரம்மியமான ஒரு பிரதேசம். மலையின் உச்சிக்குச் செல்வதற்கு cable train இருக்கின்றது. 2 ரயில்களில் ஏறித்தான் மலை உச்சிக்குச் செல்ல முடியும். மலையின் மேல் ரயில் பெட்டி ஏறும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இதே போன்ற இரயில் சுவிஸர்லாந்தில் Jungfrau மலைப் பகுதியிலும் இருக்கின்றது. வித்தியாசம் என்னவென்றால் இங்கே சுவிஸர்லாந்தில் மலை பனியால் முற்றாக மூடப்பட்டிருக்கும். ஆனால் பினாங்கில் அப்படியில்லை. குளிர்ச்சியாக இருந்தாலும் பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும்.
இந்த மலையின் உயரம் 830 மீட்டர் நீளமாகும். மலை உச்சியில் மதிய நேரம் கூட மிகக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். மலைக்கு மேல் அழகான பூங்காக்கள், உணவு விடுதிகள் விளையாட்டு மையங்கள் ஆகியவற்றோடு அழகான முருகன் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இலங்கையில் கண்டி எனும் ஊரில் இதே போன்ற ஒரு கோவிலை நான் பார்த்திருக்கின்றேன். அதை குறிஞ்சிக் குமரன் கோயில் என்று சொல்வார்கள். பினாங்கிலேயே இரண்டு மலைகளில் முருகன் ஆலயத்தைக் காணமுடியும். தண்ணிர்மலையில் ஒன்று மற்றொன்று இந்தக் கொடிமலையில் இருக்கும் கோவில்.
கொடி மலையின் அடிவாரத்திலேயே மிகப் பெரிய புத்தர் ஆலயம் ஒன்று இருக்கின்றது. Kek Lok Si ஆலயம் என்று இது அழைக்கப்படுகின்றது. இந்த புத்தர் ஆலயத்தில் பர்மா, தாய்லாந்து மற்றும் சீன வகை புத்த வழிபாட்டு வகையிலான பூஜைகள் தினமும் நடந்து கொண்டிருக்கும். தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்த பீடத்தை தினமும் பார்க்க முடியும். பல பூஜை மண்டபங்கள், தியான அறைகள் இங்கு உள்ளன. இந்த புத்த ஆலயத்தை அடைவதற்கு நீளமான செங்குத்தான படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிகளில் சிறிய சிறிய கடைகளில் நினைவுச் சின்னங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பார்த்துக் கொண்டே படியேறி விடலாம். நடந்த களைப்பே தெரியாது. இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கிருக்கும் ஆமை குளம் தான். நூற்றுக்கனக்கான ஆமைகளை இங்கு குளங்களில் வைத்து வளர்க்கிறார்கள். பெரிய பெரிய ஆமைகள் இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். தொடரும்..

Posted at 10:55 pm by subaillam
Make a comment

Nov 1, 2003
Dr.Mahathir

மலேசியாவின் நான்காவது பிரதமராக நேற்று வரை இருந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் துன் மாஹாதீர். 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்திருக்கின்றார். பல ஆண்டுகள் பிரதமராக இருந்து விட்டதால் இளைய தலைமுறையினர் நாட்டை ஆள வேண்டுமென அறிவித்து விட்டு ஓராண்டுக்குப் பின்னர் நேற்று பதிவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

டாக்டர். மஹாதீர் மருத்துவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். மலேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, மலேசியாவின் ஈடு இணையற்ற தலைவராக செயல்பட்டு வந்திருக்கின்றார். இவரது தலைமையின் கீழ் மலேசியா கண்ட வளர்ச்சி மிகப் பெரிது. மலேசிய நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதரும் (எதிர் கட்சியினரும் கூட) இவர்மேல் வைத்திருக்கும் அன்பு அதிசயமான ஒன்றுதான். மலேசியா மற்றும் ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலகளாவிய அளவில் தைரியமாக தனது எண்ணங்களைப் பேசக்கூடியவர் என்று பெயரெடுத்தவர்.


மலேசியாவை வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றியதில் இவரது பங்கு அதிகம். புதுமை விரும்பியான இவரது திட்டங்கள் அனைத்துமே நாட்டின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன.
வெளிநாட்டு பத்திரிக்கைகள் அதிலும் குறிப்பாக அமெரிக்க பத்திரிக்கைகள் மலேசியாவை மட்டம் தட்டி பேசுவதைக் குறியாகக் கொண்டு பல முறை செயல்பட்டிருக்கின்றன. மஹாதீரின் வெளிப்படியான தைரியமான பேச்சுக்களை கிரஹிக்க முடியாத பல நாளிதள்கள் கூட இவரைத் தாக்கி எழுதுவதில் அதிலும் குறிப்பாக இவரை ஒரு கொடுங்கோலராக வர்ணிப்பதில் அதிகமாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் மலேசியாவிற்கு வந்து பார்த்து மக்களின் சுபிட்சம் நிறைந்த வாழ்க்கையைப்பார்ப்பவர்களுக்குத்தான் திரித்து எழுதப்படும் இவ்வகைச் செய்திகளில் இருக்கும் பொய் தெரியவரும்.
SIGNING OFF: Dr Mahathir, surrounded by ministers, putting down his signature to the minutes of the Cabinet meeting which he chaired for the last time in Putrajaya Wednesday.


டாக்டர் மஹாதீரைப் பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது. கிழக்காசிய நாடுகளின்மிகப்பிரபலமான அரசியல் தலைவர் இவர். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்க்கானும் வலைத்தளத்தைப் பாருங்கள். http://pmproject.doubleukay.com/biography.html இது வரை பதவியில் இருந்தது போதும்; அடுத்தவர் தலைமைப் பதவிக்கு வவேண்டும் என்று எத்தனைத் தலைவர்களால் நினைக்க முடியும். இவர் ஒரு அபூர்வ மனிதர்தானே!

Posted at 11:31 am by subaillam
Comments (3)

Oct 31, 2003
Penang - 1


பினாங்கு மாநிலம் அழகான குட்டியான ஒரு மாநிலம். இந்த மாநிலத்திற்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று பினாங்குத் தீவு, மற்றொன்று பட்டர்வொர்த் என்று அழைக்கப்படும் தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் Georgetown. இந்த மாநிலத்தின் சிறப்பே இதன் சுற்றுலா தலங்கள் தான். இந்த மாநிலத்தில் தான் அனைத்துலகப் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் ஒன்றான Universiti Sains Malaysia அறிவியல் பல்கலைக் கழகம் இருக்கின்றது.

பினாங்கில் வார ஓய்வு நாட்களைக் கழிப்பதற்கு இனிமையான பல இடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் நான் எனது நண்பர்களோடு எப்போதும் வெளியே கிளம்பி விடுவதுண்டு. ஒவ்வொரு நாளும் இங்கே திருநாள் தான். மனதிற்குப் பிடித்த அத்தனை விஷயங்களும் இங்கே கிடைக்கும்.

பினாங்குத் தீவையும் பட்டர்வொர்த் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்று 1988ல் கட்டப்பட்டது. இதன் நீளம் 13.5 km. ஒவ்வொரு முறை இந்தப்பாலத்தைக் கடக்கும் போதும் காரிலிருந்து இறங்கி தீவின் அழகை ரசிப்பதற்கு எனக்குப் பிடிக்கும். அதிலும் காலை நேரத்தில் பாலத்தில் பிரயாணம் செய்யும் போது பாதி பனி மூடியும் மூடாமலும் இருக்கும் காட்சி கொள்ளை அழகு.


பினாங்கு தீவிற்கு வருவதற்கு Ferry கப்பல் எடுத்தும் பிரயாணம் செய்யலாம். 30 நிமிடம் நீடிக்கும் இந்தப் பிரயாணம் சுவாரசியமாக இருக்கும். கடலில் நீந்தும் Jelly மீன்களை கண்டு ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.

மலேசியா பொதுவாக பச்சை பசேலென்று இருக்கும் ஒரு நாடு. இங்கு வருடம் முழுதுமே (ஏப்ரல் மே தவிர்த்து) மழை பெய்து கொண்டே இருக்கும். ஆக பினாங்கில் இயற்கை ஆழகு நிறைந்த பல பூங்காக்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று Botanical Garden. இந்தப் பகுதியை தண்னீர் மலை என்று சொல்வதும் உண்டு. இந்தப் பகுதியில் மலேசியாவில் மிகப் பிரசித்தி பெற்ற 3 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. தண்ணீர்மலை முருகன் கோயில் (மலைக்கோயில்), நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயில், அதோடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் மலேசியாவின் மிகப் பிரசித்தி பெற்றவை. மலேசியாவைச் சுற்றிப் பார்க்க நினைத்தால் தைப்பூசம் நடக்கும் நாளை நாட்குறிப்பில் பார்த்து விட்டு வர மறக்க வேண்டும். (மலேசியாவின் சிறப்புக்களில் தைப்புசத் திருவிழாவும் ஒன்று) சரி Botanical Garden-க்கு வருவோம்.

இந்த Botanical Gardenக்கு வந்தவுடனே நம்மை வரவேற்க குரங்குகள் ஓடிவரும். அவ்வளவு குரங்குகள் இங்கே உண்டு. இங்கே செல்லும் போதெல்லாம் பழங்களும் கடலைகளும் வாங்கிக் கொண்டுதான் செல்வேன். நடக்கும் போது கைகளில் வந்து பிடிங்கிச் செல்லும் அளவிற்கு இந்தக் குரங்குகளுக்கு அவ்வளவு தைரியம் உண்டு. Botanical Garden வாசலிலேயே இளநீர் கடைகள் மற்றும் குளிர்பான சிற்றுண்டி கடைகளும் இருக்கும். Botanical Garden உள்ளே சென்றால் அருவி ஒன்று இருக்கும். இங்கே குளித்து மகிழலாம். மலை உச்சியிலிருந்து கொட்டும் அருவி சில்லென்ற அருவியாகியிருக்கின்றது.


மலேசியாவிற்கு வரவேண்டுமென்று இப்பவே ஆசை வந்துவிட்டதல்லவா..:-)

Posted at 03:59 pm by subaillam
Comments (3)

Oct 30, 2003
People's Hero

இன்னைக்கு ஒரு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன்...

வீரபாண்டிய கட்டபொம்மனை எப்படி தமிழ் நாட்டிலே எல்லோரும் மகாவீரராக நினைக்கின்றனரோ அதேமாதிரி எங்க மலேசியாவிற்கும் ஒரு சில மகா வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் மலாக்கா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் ஹங் துவா. இவர் வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அப்போது மலேசியா இஸ்லாமிய நாடாக மாறியிருந்தது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மலாக்காவை ஆண்ட அரசன் பரமேஸ்வரன் இஸ்லாமிய பெண்ணை மணந்து தானும் மதம் மாறி மலேசிய நாட்டையே இஸ்லாமிய நாடாகவும் மாற்றி விட்டிருந்தான். அவனது பரம்பரையில் வந்த ஒரு ராஜாவின் அரண்மனையில் மிக முக்கிய பொருப்பில் இருந்தான் வீரன் ஹங் துவா.

இவனுக்கு 4 நண்பர்கள்; ஹங் ஜெபாட், ஹங் கஸ்தூரி, ஹங் லெக்கியூ, ஹங் லெக்கீர். இதில் ஹங் ஜெபாட் இவனது மிக மிக நெருங்கிய நண்பன். இருவரும் நகமும் சதையும் போல அவ்வளவு நெருக்கம். ஹங் துவா கத்திச் சண்டையில் வல்லவன்.
இந்த வகைக் கத்தியை 'கெரிஸ்' என்று சொல்வார்கள். இந்த கெரிஸ் சண்டையில் ஹங் துவா வல்லவன். இவனது வீரத்தை நாடே புகழ்ந்தது.
ஒரு முறை மன்னருக்கு சில அமைச்சர்கள் ஹங் துவாவைப்பற்றிய தவறான தகவல்களைத் தரவே, அரசன் ஹங் துவாவை தேடிக் கண்டுபிடித்து கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்து விட்டார். இதைக் கேட்ட ஹங் துவா தலைமறைவாகி விட்டான். அரச கட்டளையைக் கேட்ட நண்பர்கள் நால்வரும் மிகுந்த கோபம் அடைந்தனர். ஹங் துவா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஹங் ஜெபாட் இந்த கட்டளையைக் கேட்டு கொதித்து எழுந்தான். நாட்டிற்காக உயிரையே கொடுக்கவும் தயங்காத ஹங் துவாவின் மேல் ஏற்பட்ட பழிக்காக அரசரைக் கொல்ல முடிவெடுத்தான். அரசரின் அரண்மனைக்குச் சென்று அனைவரையும் பயமுறுத்தி விரட்டினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசர் செய்வது அறியாது திகைத்தார். அமைச்சர்கள் உடனே, இந்த ஆபத்திலிருந்து அரசர் தப்பிக்க ஹங் துவா ஒருவனால் தான் முடியும் எனக் கூறவே அரசனும் ஹங் துவாவைத் தேட ஆட்களை அனுப்பினான். அரசர் ஆபத்தில் மாட்டிக் கொண்டதை அறிந்த ஹங் துவா உடனே நாட்டுப் பற்றின் காரணமாக அரசரைக் காப்பாற்ற விரைந்தான்.

அரசரை எதிர்ப்பவன் தனது உயிர் தோழன் ஹங் ஜெபாட் தான் என்பதை அறிந்ததும் திகைத்தான். நண்பனா அரசரா என்ற குழப்பத்தில் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் நாட்டின் நண்மைக்காக தனது நண்பனையே தனது கூரிய கெரிஸ் கத்தியால் குத்திக் கொன்று அரசரைக் காப்பாற்றினான். இந்த குழப்பம் மிகுந்த சண்டை 3 பகல் 3 இரவுகள் நடந்ததாம். பக்கத்தில் இருப்பதுதான் மலாக்காவில் இன்றளவும் இருக்கும் ஹங் ஜெபாட்டின் கல்லறை.
அரசர் இந்த நிகழ்வுக்குப் பின் ஹங் துவாவை (மன்னித்து??) ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றளவும் இந்த நிகழ்வு ஒரு சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் அரசர் செய்தது தவறு தானே! ஹங் ஜெபாட் தனது நண்பனுக்காகத் தானே போராடினான். ஆனால் ஹங் துவா செய்தது சரியா..? எனப் பல விவாதங்கள் இன்றளவும் மலேசியாவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. [கற்பில் சிறந்தவள் கண்ணகியா மதாவியா என தமிழகத்தில் விவாதம் நடப்பது போல..:-) ]

Posted at 06:03 pm by subaillam
Comments (3)

Oct 29, 2003
Malaysian states & Flag

இப்போது பல தமிழ் சினிமா படங்களில் மலேசியாவின் பல அழகிய இடங்களைப் பாடல் காட்சிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் முக்கியமாக, உலகின் மிக உயர்ந்த கட்டிடமான இரட்டைக் கோபுரங்களை இப்போது பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் காண முடிகின்றது. மலேசியாவிற்குச் செல்பவர்களும் எப்போதும் மலேசிய தலைநகரான குவாலாலும்பூர் (Kuala Lumpur) செல்வது தான் வழக்கம். அதற்கு அடுத்ததாக மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாநிலமாகத் திகழ்வது பினாங்கு மாநிலமாகும். நானும் பினாங்கில் தான் பிறந்தேன்..:-)

சிலர் தவறாக சிங்கப்பூரையும் மலேசியாவின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு; சிங்கப்பூர் ஒரு தனி நாடு. மலேசியா ஒரு தனி நாடு.



மலேசியாவில் மொத்தம் 13 மாநிலங்கள் இருக்கின்றன. அவை வடக்கிலிருந்து பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், த்ரெங்கானு, பஹாங், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், சபா, சரவாக் ஆகும். இந்த பதின்மூன்றோடு மேலும் ஒரு மாநிலமாகக் கூட்டரசு பிரதேசங்கள் குவாலாலும்பூர் மற்றும் லாபுவான் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியக் கொடியில் 14 (சிவப்பு + வெள்ளை) கோடுகள் இருக்கும். இவை பதினான்கு மாநிலங்களைக் குறிப்பவை.


நீல வர்ணம் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கின்றது; பிறை நிலா, மலேசிய நாட்டின் மதம் இஸ்லாம் என்பதையும், மஞ்சள் வர்ணம் உயரிய தன்மையையும் குறிக்கின்றது. இந்த மஞ்சள் நிறம் மலேசியா அரசாட்சி செய்யப்படும் ஒரு நாடு என்பதைக் குறிப்பதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

Posted at 05:01 pm by subaillam
Comments (8)

Oct 28, 2003
Historical information -1

மலேசிய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பல நூற்றாண்டுத் தொடர்புகள் உண்டு. 100 B.C முதல் 1400 A.D வரை மலேசியா இந்து ராஜியத்தின் கீழ் இருந்தது. பல ஹிந்து அரசர்கள் மலேசியாவை ஆட்சி செய்துள்ளனர். இந்த சமயத்தில் மலேசிய நாட்டின் கலாச்சாரம் முற்றிலும் ஹிந்து கலாச்சாரத்துடன் மாறுபடாத ஒன்றாக மாறி விட்டிருந்தது. இந்திய அரசர்கள் பெரும்பாலும் மேற்கு மலேசியாவிலேயே தங்கள் ராஜியத்தை அமைத்திருந்தனர். மலேசியா இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு இடமாக இருந்ததால் இந்திய அரசர்களுக்கு வணிகத்திற்கு உகந்த முக்கியமான நாடாக அமைந்து விட்டது.

இந்திய அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தையும் இந்து சமயத்தையும் தழுவிக் கொண்டு சமயத்தை வளார்த்தனர். ஹிந்து ஆலயங்கள் நிர்மானிக்கப்பட்டன. இந்திய கலாச்சாரம் மக்களின் கலாச்சரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இந்திய கலாச்சாரத்தால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவை இன்றைக்கும் பற்பல முக்கிய தேசியச் சடங்குகளில் காண முடியும். உதாரணமாக திருமணத்தின் போது மஞ்சள் அரிசியைத் தூவுவது மலாய்காரர்களின் மிக முக்கியச் சடங்குகளில் ஒன்று. அதேபோல மிக முக்கிய நாட்களில் மகாராஜாவும் மகாராணியும் மஞ்சள் நிற உடையிலேயே பொது மக்களுக்குக் காட்சி அளிப்பர். மஞ்சள் மிக உயரிய தன்மையைக் காட்டும் நிறமாக மலாய்க்காரர்களால் மதிக்கப்படுகின்றது.

Posted at 07:17 pm by subaillam
Comments (1)

Previous Page

Next Page